மெட்ரோ சந்திப்பு

“விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில் நடைமேடை ஒன்றில் வந்து கொண்டிருக்கிறது”….

நான் தினமும் கேட்கும் அதே குரல் இன்றும் ஒலிக்க, விம்கோ நகர் நிறுத்தத்தில் இருந்து காலியான ஒரு பெட்டியில் ஏறிக் கதவுகளின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு கண்ணாடிப் பேழையின் மேல் சாய்ந்து கொண்டேன்.

செவிப்பொறியில் இளையராஜா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அண்ணா நகர் நிறுத்தத்துக்கு இன்னும் 40 நிமிடங்கள் ஆகுமே, அது வரை இளையராஜா தான் என் துணை!!

இரயில் காலடிப்பேட்டை நிறுத்தத்தை அடைந்த போது, அமைதியான கடற்கரையில் புயல் அடித்தது போல இரயில் பெட்டியே நிரம்பி வழிந்தது. கண்ணாடிப் பேழைக்கு எதிர்ப்புறம் ஒரு பிஞ்சு விரல் தட்டும் சத்தம் கேட்டது…

புர்கா அணிந்த ஒரு 5 வயது சிறுமி என்னைப் பார்த்து நகைக்கவே, நானும் ஒரு சிறு புன்னகையை உதிர்த்தேன். ஐந்து நிமிடங்களுக்குள் நவரசங்களையும் நளினமாக முகத்தில் காண்பித்தாள் அந்தச் சின்னஞ்சிறு குழந்தை. ஆச்சர்யத்தில் உறைந்த நான் பூரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…

“அடுத்த நிறுத்தம் …சுங்கச்சாவடி” என ஒலிப் பெருக்கியில் ஒலிக்கவே குழந்தையை அழைத்துக்கொண்டு அவள் தாய் இறங்கிச் சென்றாள்…கையை அசைத்தபடி வெளியே சென்ற அந்த குழந்தைக்கு நானும் செய்கையில் “டா-டா” சொன்னேன்…

அவள் சென்ற மறுநொடி கண்ணாடிக்கு எதிரே உள்ள மற்றொரு இருக்கையில் இருந்த இரு விழிகள் என்னைக் கவர்ந்து இழுத்தது. அந்தக் குழந்தை சைகை மொழியில் பேசியது போலவே, அங்கு இன்னொரு பெண் சைகையில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அந்த அழகிய முகத்தில் நிலவொளி படர்ந்தது போல அவள் சிரிப்பு முகமெங்கும் படர்ந்தது.

சற்று முன்பு குழந்தை முகத்தில் பார்த்த அதே நவரசங்களை 10 நிமிடங்களுக்குள் அவள் பாவனைகள் எனக்குக் காண்பித்தன. அவளிடம் பேசச் சொல்லி மனம் என்னைக் கெஞ்சிடவே, அவளருகே சென்ற எனக்கு, ஒரு கனம் மனம் பதைபதைத்தது. சிலையென உறைந்து நின்றேன், கடவுளை நேரில் கண்ட பக்தன் போல, அவளருகே நான், மொத்த ரயிலும் எங்களைப் பார்ப்பது போன்ற ஒரு எண்ணம்.

“ஹலோ” என என் வாய் உச்சரிப்பதற்குள், “central metro” என்ற அந்தக் ஒலிப்பெருக்கிக் குரல் மீண்டும் ஒலிக்க, அங்கிருந்து எழுந்த அவள் மெட்ரோ கதவு வழி வெளியே சென்றாள். மழை நின்ற பின்பும் ஏக்கத்தில் தவிக்கும் மயில் போல அங்கே மனமுடைந்து நின்றேன்.

தினமும் அலுவல் செல்லும் பொழுது அதே பெட்டியில் ஏறி அதே இருக்கையில் அமரத் தொடங்கினேன். 30 வருடங்களாக தினமும் அதே இடத்தில் நான், அவளைத் தேடி என் கண்கள்….ஆனால் ஏனோ அவளை நான் பார்க்கவே இல்லை.

அன்று என் 50 வது பிறந்தநாள், அன்றும் எப்பொழுதும் போல மெட்ரோவில் என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காலடிப்பேட்டை நிறுத்தத்தில் பலர் எறிடவே, வயது முதிர்ந்த என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவளைத் தேடின. தேடிச் சோர்ந்த கண்களை ஒரு குரல் அழைத்தது. “நாம இதுக்கு முன்னாடி பாத்து இருக்கோமா?” என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கண்களை நிமிரச் செய்தது. கண் கண்ணாடியை அணிந்து கொண்ட நான் நிமிர்ந்து பார்த்திடவே, அன்று கண்ட அதே முகம். இன்னும் அந்த நிலவொளி படர்ந்த சிரிப்பு மாறாமல் அப்படியே ஒளிர்ந்தது. புன்னகைத்த நான், “ஹலோ” என்று கூறினேன். ஆம், 30 ஆண்டுகள் காத்திருப்புக்குக் பின் நிகழ்ந்த “ஹலோ”, என் கண்களில் நீரை வடிய வைத்தது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started